Monday, October 25, 2010

பஞ்சம், பசி, பட்டினி!

திடீரென அது எங்களைத் தாக்கியது, ‘அது’ என்றவுடன் ஏதோ ஒரு பயங்கர விலங்கு என நினைத்து விட வேண்டாம். அதை விட கொடியது. பஞ்சமய்யா, பஞ்சம்! செல்வச்செழிப்புடன்(?) இருந்த எங்களுக்கு அப்படியொரு நிலைமை வரும் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் ஆராவுக்கு 2000 ரூபாயும், JGக்கு 2000 ரூபாயும் இருக்கிறது. ஆனால் இங்கில்லை. வங்கியில்! வங்கியில் எங்கள் பெயரில் இல்லை. வெங்கட் என்ற நண்பரின் பெயரில். அவரோ தற்சமயம் ஊரில் இல்லை. டெல்லியில். இதைத்தான் பணமிருந்தும் பரதேசி என்பார்களோ?

எங்கள் நிலைமைக்கு ஒரு உதாரணம்: கிடந்த சில்லறைகளை சேர்த்துக்கொண்டு கடைக்குச் சென்றான் அமுதன். பணமிருந்தால் பசிக்காத அவனுக்கு அகோரப்பசி. ‘ஐயா, ஒரு tiger biscuit தாருங்கள்’ என்றான். கடைக்காரர், ‘தம்பி, tiger biscuit இல்லை, glucose biscuit தருகிறேன்’ என்றார். “வேண்டாம், வேண்டாம்” என அலறியபடி ஓடிவந்தான் அமுதன். காரணம் அப்படி. glucose biscuit, tiger biscuit-ஐ விட ஒரு ரூபாய் (யப்பா, எவ்வளவு பணம்) அதிகம்!

எங்கள் நிலைமை இப்படியென்றால், இன்னொருவரின் நிலைமை அதை விட மோசம். Dubai-யிலிருந்து திரும்பி வருகிறார் அந்த நபர். Airport-லிருந்து taxi-யில் தம்பி வீட்டிற்கு வருகிறார். தம்பி வீட்டில் இல்லை. எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தார். ‘பாஸ், இருநூறு ரூபாய் கொடுங்கள், taxi-க்கு கொடுக்க வேண்டும்’ என்றார். மயக்கம் வந்து விட்டது எங்களுக்கு! Dubai return-னின் கதி இப்படியா? அப்படியென்றால் வேலை வெட்டி இல்லாமல் குப்பை கொட்டும் எங்கள் நிலைமை எவ்வளவோ மேல்!

கடைசியில் நிலைமை ரொம்ப மோசமாகிவிடவே, உண்டியலை உடைப்பதென்று முடிவு செய்தோம். உடைத்தோம். சில்லறை, சில்லறை...! ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், ஐம்பது காசு... நான்கு பேரும் ஆனந்தத்துடன் எண்ணினோம். ஆஹா... 122 ரூபாய் 45 காசு சேர்ந்தது. நான்கு நாட்களுக்கு கவலையில்லை, இரவு ஆனந்தமாக set dosa சாப்பிடலாம், ஆனால் கடைசியில் மனசாட்சி உறுத்தியது. அனைத்தையும் திரும்ப வைத்து விட்டோம். காரணம் உண்டியல் எங்களுடையதல்ல., பசியிலும் என்ன ஒரு பண்பு. (வேறு வழியில்லாமல் 20 ரூபாய் எடுத்தது வேறு விசயம்!)

அண்ணாமலை என்றொரு நண்பன் DD அனுப்புவதாகச் சொல்லி வாரம் ஒன்றுக்கும் மேல் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளும் courier-ஐ ஆவலுடம் எதிர்பார்த்தோம். ஒவ்வொரு ஓசைக்கும் ஓடி வந்து வாசலைப் பார்த்தோம். வந்தது courier! அந்த மனிதன் வந்து தருவதற்குள் பிடுங்காத குறையாய் அதை வாங்கி அவசரத்துடன் கிழித்தோம். DD... Huraay...! அதுவும் நான்காயிரம் ரூபாய்க்கு! ஆனால் சந்தோசம் நிமிட நேரத்தில் தொலைந்து போனது, DD இருந்தது மீண்டும் வெங்கட் பெயரில்! கானல் நீரானது எங்கள் சந்தோசம்.

ஆசை விடவில்லை. ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அனைவரின் உடைமைகளையும் மீண்டும் சோதனை போடுவதென்று முடிவெடுத்தோம். ஏதாவது கிடைக்காதா என்ற நப்பாசையில்தான். திடீரென அமுதன் கத்தினான் ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ என்று. மகிழ்ச்சியில் எல்லோரும் அவனை சூழ்ந்து கொண்டோம். எடுத்துக்காட்டினான், 10 பைசாவை, அவன் பெட்டியில் இருந்து. அதையும் சேர்த்து ஒண்ணரை ரூபாய் சேர்ந்தது.

“அப்பாடி! நாளை Times of India-விற்கு கவலை இல்லை”, என்று நிம்மதியுடன் பெருமூச்சு விட்டான் JG.

Extract from Pages 21-29 Aug 2000 of 'Our Golden Days @ Bangalore' by Ara, Arun, Shantha & JG