Wednesday, August 28, 2013

காய்ரா, நான் மற்றும் கல்யாண வீட்டில் ஒரு பெண்!



"அந்த பொண்ணு சூப்பரா இருக்கில்ல..." காய்ரா மகிழ்ச்சியுடன் கத்தினான்.


இடம்: கொச்சி
நிகழ்ச்சி: அனு - நரேஷ் திருமணம்


நான், ஆரா, சாந்தா, காய்ரா & வெண்ணை ராமன் ஐவரும் கொச்சி வந்திருந்தோம். கல்யாண வீடு என்றால் அழகான பெண்கள் இல்லாமலா...

"எந்த பொண்ணுடா?"  - அருண்

"கல்யாண வீட்டுக்கு வந்துட்டு என்ன வேலைடா செய்யிறீங்க..." - வெண்ணை

"ஏண்டா இப்படி அலையுறீங்க..." - சாந்தா

"தாடி, உனக்கு வயசாயிடிச்சு.. சின்ன பசங்க இப்படி அப்படித்தான் இருப்பாங்க..."

"யாரு, நீ சின்ன பையனா, நாலு கழுதை வயசாயிடிச்சு உனக்கு..."

"உனக்கு பொறாமை தாடி..."

...

"வாங்கப்பா, எல்லோரும் மாடிக்கு போகலாம்... அங்க இருந்து பார்த்தா மண்டபம் முழுவதும் தெரியும்."

"போகலாம், போகலாம்... அப்பதான் அந்த பொண்ணு எங்க போனாலும் தெரியும்"

"உங்க கூட வந்தோம் பாரு, தலையெழுத்து..."

...

"வாங்கடா சாப்பிட போகலாம், வயிறு பசிக்குது"

"ஏண்டா வெண்ணை, அதுக்குள்ள என்ன பசி, அந்த பொண்ணே இன்னமும் சாப்பிட போகலை..."

"டேய், வேணாம்..."

"அதத்தானடா நாங்களும் சொல்லுறோம், இப்ப வேணாம், அந்த பொண்ணு போகும் போது நாமளும் சாப்பிட போகலாமுன்னு..."

வெண்ணை ராமனுக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால் நானும் காய்ராவும் அப்பவே எரிந்து சாம்பலாகி இருப்போம்.

...

"ஏண்டா அதுக்குள்ள எந்திருச்சுட்டீங்க, சாப்பிடலையா?"

"அந்த பொண்ணு எந்திரிச்சு போனப்புறம் இன்னமும் என்ன சாப்பாடு வேண்டியிருக்கு??..."

"தாங்க முடியலைடா சாமி..."

"போங்கடா, போங்க, மறந்துறாம கையை கழுவிட்டு போங்க..."

...

"இந்த ரெண்டு பேரும் எங்கடா போய் தொலைஞ்சானுங்க... stage-க்கு போகலாமுன்னு பார்த்தா ஆளையே காணோம்..."

"அந்த பொண்ணு எங்கயாவது கண்ணுல தென்படுதான்னு பாரு, இவனுங்களை ஈசியா கண்டு பிடிச்சிறலாம்..."

...

கடைசியில் வாழ்த்து கூறுவதற்காக மேடையேறினோம். வாழ்த்து கூறி, புகைப்படம் எடுத்து வந்தவுடன் சாந்தா சொன்னான்.

"வெண்ணைங்களா, அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம்..."

திடீரென கல்யாண மண்டபமே அமைதியானது போல தோன்றியது.

'ஏன் தாடி, இதை மொதல்லே விசாரிச்சு சொல்ல வேண்டியதுதானே... வீணா அலைஞ்சுருக்க மாட்டோம்ல..." - சோகத்துடன் சொன்னான் காய்ரா.


பின் குறிப்பு: இது ஒரு உண்மை கலந்த கற்பனைக் கதை.

Tuesday, July 9, 2013

வெண்ணை ராமனின் சமையல் குறிப்பு!

"என்னடா, இன்னைக்கும் உருளைக்கிழங்கு சாம்பார்தானா?" என்று கேட்டபடி, ஒரு பையில் மாம்பழங்களோடு வெண்ணை (எ) வெங்கட்ராமன் வீட்டிற்குள் நுழைந்தபோது மணி இரவு பதினொன்று ஐந்து.

அன்று சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்றாலும்கூட அழையா விருந்தாளியாக சென்று இரவு வருவது வெண்ணை ராமனின் வழக்கம். இல்லையென்றால் அவனுக்கு தூக்கம் வராது.

ஆரா வழக்கம் போல பத்து மணிக்கெல்லாம் முழுக்க போர்த்தியபடி தூங்கிக்கொண்டிருந்தான். நான், காய்ரா & சாந்தா Catherine Zeta Jones'ன் அழகை ஜொள்ளியபடி மாஸ்க் ஆப் Zorro பார்த்துக்கொண்டிருந்தோம்.

வெண்ணை ராமன், ஐந்து நிமிடத்தில் முகம் கழுவி பூ போட்ட லுங்கிக்கு மாறி சமையல் அறைக்குள் நுழைந்தான். போகிற வாக்கில் தொலைக்காட்சியை நியூஸ் சானலுக்கு மாற்றினான்.

"வெண்ணை, படம் பார்த்துக்கிட்டு இருக்குறது தெரியலை?"

"எத்தனை தடவை இந்த படத்த பார்ப்பீங்கடா..."

"நாங்க எத்தனை தடவை வேணும்னாலும் பார்ப்போம், உனக்கென்னடா..."

தட்டில் சோறோடு வந்து உற்காந்து டிவி பார்க்க ஆரம்பித்தான். கூட்டிற்கு ஒரு மாம்பழம்.

"இந்த உருளைக்கிழங்கு சாம்பாரைத் தவிர வேற எதுவும் செய்ய மாட்டீங்களாடா?" என்று அலுப்புடன் சாப்பிட ஆரம்பித்தான்.

எங்கள் அறையில் புளிக்குழம்பு, தக்காளி சாதம், புளியோதரை, தோசை என்று விதவிதமாக (?) செய்தாலும், அநேக நாள் உருளைக்கிழங்கு சாம்பார் & உருளைக்கிழங்கு கூட்டுதான். வெண்ணை ராமனுக்கு தினமும் வித்தியாசமாக சாப்பிட வேண்டும்.

"ஏண்டா வெண்ணை, லீவ் அன்னைக்கும் ஆபீஸ் போயிட்டு ராத்திரி வந்துட்டு, பேச்சைப்பாரு, ஒழுங்கா மூடிக்கிட்டு சாப்பிடு..."

"வாயை மூடிக்கிட்டு எப்படிடா சாப்பிடமுடியும்?"

"ஜோக் அடிக்கிறாராம்..., டெய்லி விதவிதமா சாப்பாடு வேணும்னா சீக்கிரம் வந்து சமையல் பண்ண வேண்டியதுதானே..."

"ரொம்ப பேசாதீங்கடா... நாளைக்குப் பாரு, நான் வித்தியாசமா ஏதாவது பண்ணுறேன்"

...

ஆக, அடுத்தநாள் வெண்ணை ராமனின் சமையல் என்று முடிவானது. இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத காய்ரா, தான் தக்காளி சாதம் செய்ய போவதாகவும், வெண்ணை ராமன் கூட்டு மட்டும் செய்தால் போதும் என ஒரு முடிவிற்கு வந்தனர்.

மதியம் ஒரு மணி வரைக்கும் வெண்ணை ராமன் சமையல் அறைக்குள் போகவே இல்லை.

'டேய், இன்னைக்கு  நீ கூட்டு பண்ணுறேன்னு சொல்லியிருக்கே, மறந்துறாதே"

"அதெல்லாம் எனக்குத் தெரியும், இன்னும் அரை மணி நேரத்தில ரெடி ஆயிடும்" என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தான்

அனைவரும் வெண்ணை ராமனின் சமையலை சுவைக்க ஆவலோடு காத்திருந்தோம். காய்ராவின் ஸ்பெஷல் தக்காளி சாதம் கமகமவென எங்கள் பசியைக் கிள்ளியது. சாப்பிடும் நேரம் வந்தது.

வெண்ணை ராமன் தான் செய்த கேரட் துருவலை கொண்டு வைத்தான். அத்தனை பெரும் அசந்து போய்விட்டோம்.

"எப்படி வெண்ணை இப்படி..."

"கலக்கிட்ட வெங்கட்ராமா..."

"எல்லாம் சரி, இதை செய்ய உனக்கு எதுக்குடா அரை மணி நேரம்?"

இப்படி எங்கள் அனைவரையும் அசர வைத்த வெண்ணை ராமனின் சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக...

வெங்கட்ராமனின் ஸ்பெஷல் கேரட் துருவல்:
தேவையான பொருட்கள்:
கேரட்: 1/4 கிலோ
எலுமிச்சை பழம்: 1
உப்பு (தேவையான அளவு)

செய்முறை:
முதலில் கேரட்டை கழுவி, தோல் சீவி பூப்போல துருவிக்கொள்ளவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். துருவி வைத்த கேரட் மேல் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு விடவும். சுவையான கேரட் துருவல் தயார்.

சமைத்து செய்து பாருங்கள். உண்டு மகிழுங்கள்...

பின் குறிப்பு: இதன் பிறகு நாங்கள் வெங்கட்ராமனை சமையல் செய்ய நிர்பந்தித்ததே இல்லை...