Monday, July 18, 2011

முழு முட்டையை சோற்றில் மறைத்த கதை!


நாங்கள் MCA மூன்றாம் ஆண்டில் கல்லூரி விடுதியை விட்டு வெளியில் வந்து வேறு அறை எடுத்து தங்குவது என்று முடிவு செய்தோம். மூன்றாம் ஆண்டில் project இருக்கும் காரணத்தினால் அரை ஆண்டு மட்டுமே விடுதியில் தங்க வேண்டியது இருந்தாலும் கல்லூரி நிர்வாகம் ஆண்டு முழுவதற்குமான கட்டணத்தை செலுத்த சொன்னதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அம்பாதுறையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்தோம். அதை அறை என்பதை விட வீடு என்றுதான் சொல்ல வேண்டும். நான், கும்மி, JG, சாந்தா மற்றும் பெயர் சொல்ல விரும்பாத, பின்னர் எதிரியாகிப் போன ஒரு நண்பன்(?). இது போக இன்னமும் இரண்டு பேர், தினமும் வந்து போகும் உறுப்பினர்கள்.

ஆரா திண்டுக்கல்லில் அவனுடைய அக்காவின் வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்தான். தினமும் கல்லூரிக்கு வருகிறானோ இல்லையோ, எங்களுடைய வீட்டிற்கு வரத்தவறுவதில்லை. காய்ரா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் கணேஷ்பாபு மதுரையில் இருந்து நேரடியாக எங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் கல்லூரிக்குச் செல்வான். நிரந்தர உறுப்பினர்களை விட ஆராவும், காய்ராவும் தான் கல்லூரி முடிந்தபின் வீட்டிற்கு முதலில் வந்து, பால் வாங்கி, காபி போடுவார்கள். அதுவும் காய்ரா வந்து காபி குடித்துவிட்டு, மாடியில் இருந்து ரயில் வருகிறதா என்று பார்த்து, தூரத்தில் ரயில் தென்பட்ட பிறகுதான் ரயில் நிலையத்திற்கு ஓடுவான்.

பூந்தோட்டங்களின் ஒருபுறமாக உள்ள ரயில் பாதை வழியாக தினமும் அம்பாதுறையில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று வருவது இனிய அனுபவம். அதிர்ஷ்டம் பக்கம் இருந்தால் வழியில் பாம்பு, தேள் போன்ற ஜந்துகளையும் பார்க்கலாம். அம்பாதுறை ரயில் நிலையமே எங்களின் குடிநீர் தேவையை தீர்த்து வந்தது. சில பல பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை இனிதாகவே போய் கொண்டிருந்தது.

அந்த வாடகை வீட்டில் ஒரே குறை, அசைவம் சமைக்க கூடாதென்பதுதான். வீட்டின் உரிமையாளர் ரொம்பவே நல்லவர். வீடு வாடகைக்கு எடுக்கும் போது அவர் போட்ட ஒரே நிபந்தனை, அசைவம் சமைக்க கூடாதென்பதுதான். JG-யை தவிர அனைவரும் அசைவம் சாப்பிடுபவர்கள். எங்களுடைய அசைவ சாப்பாடு வெறியை ஆம்லெட் வடிவில் தீர்ப்பவை சின்னாளப்பட்டி பிரிவில் இருந்த கையேந்திபவன்களும், காந்திகிராம பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்த புரோட்டா கடைகளும்தான்.

எங்களுடைய வீட்டிற்கு அருகில் வீடு எடுத்து தங்கியிருந்த இரண்டு பிரம்மச்சாரி ஆசிரியர்கள் வாராவாரம் சிக்கன் பொரிக்கும் வாசனை ஜன்னல் வழி வந்து எங்களை பாடாய்ப்படுத்தும். சமைக்க கூடாதென்பதுதானே நிபந்தனை, சாப்பிடக்கூடாதென்று கூறவில்லையே என லாஜிக் பார்த்து, ஒருமுறை சிக்கன் வாங்கி, அந்த ஆசிரியர்கள் வீட்டில் பொரித்து, எங்கள் வீட்டில் வைத்து சாப்பிட்டோம்.

கடைசியில் ஒருநாள் அந்த நிபந்தனையை உடைப்பதென்று ஒருமனதாக முடிவு செய்தோம். ஆம்லெட் போடலாம் என முட்டை வாங்கியாகிவிட்டது. ஆனால் ஆம்லெட் மணம் காட்டிகொடுத்து விடுமே என்ற பயம் வேறு. அதற்கு சாந்தா ஒரு யோசனை சொன்னான். வாசனை மிகுந்த பத்தி ஒன்றை வாங்கி கொளுத்திவிடுவது அல்லது ஒரு துணியை தீயில் காட்டி அணைத்து கருக விட்டால், ஆம்லெட் மணத்தை அது மறைத்துவிடும் என்று. ஆனாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஆம்லெட் போடும் எண்ணத்தைக் கைவிட்டு, முட்டை அவித்து சாப்பிடுவதென்று பிளான் மாறியது. (இதே யோசனையை பின்பற்றி, பெங்களூரில் சிக்கன் சமைத்தது வேறு கதை!)

ஒருவழியாக சமையல் முடித்து சாப்பிட உட்கார்ந்தோம். JG-யை தவிர அனைவரின் தட்டிலும் ஆளுக்கொரு முட்டை. ஒருவாய் கூட வைத்திருக்க மாட்டோம், தடார் என்று கதவு திறந்தது. வாசலில் வீட்டின் உரிமையாளர். என்ன செய்வதென்று தெரியவில்லை. கும்மி தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினான். அவசரத்தில் இன்னொருவன் முட்டையை சோற்றை வைத்து மறைக்க முயற்சித்தான். 

முதல் அசைவ சமையல் முயற்சியே இப்படி தோல்வியில் முடிந்து விட்டதே என்ற சிந்தனை வேறு. ஆனால் உரிமையாளர் வந்ததோ வேறு விஷயத்தைப் பற்றிப் பேச. நல்ல வேளையாக அவர் எங்களுடைய தட்டை பார்க்காமலேயே பேசி முடித்து சென்ற பிறகுதான் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாங்கள் அந்த வீட்டில் அசைவம் சமைக்க முயற்சிக்கவே இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

பின் குறிப்பு: முட்டையை சோற்றை வைத்து மறைக்க முயற்சித்த அந்த நபர் வேறு யாருமில்லை, அடியேன்தான்...

Friday, June 17, 2011

ஒரு அரசியல் நகைச்சுவை பதிவு


முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்துவிட்டு அடுத்த படத்துக்கு சரக்கு இல்லாமல் இருக்கும் டைரக்டர்கள் போல, பெரும் வரவேற்பு பெற்ற (?) முதல் பதிவுக்கு பின் என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன்...

சரி, முதல் பதிவு போல சொந்தக்கதையையே எழுதலாம் என்று பார்த்தால் அது ரொம்ப சோகக்கதையா இருக்கு என்று சிலர் சொல்லி விட்டார்கள்.. நிறைய பேர்(?) 'உங்களிடமிருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறோம்'-ன்னு வேற சொல்லிட்டாங்க, என்ன எதிர்பார்க்குறாங்கன்னு ஒண்ணுமே புரியலை, ஹி.. ஹி...

கடைசியில் கடந்த சில நாட்களில் படித்து, ரசித்த, சிரித்த இரண்டு செய்திகளை பதிவாக போடலாம் என்றதன் விளைவே இந்தப்பதிவு...

~
நகைச்சுவை-1

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பகுதி நேர நடிகர்/இயக்குனர்/அரசியல்வாதி சீமான் "தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே காரணமாக அமைந்தது," என்று பேசி இருக்கிறார்.

இப்படியெல்லாம் பேச இவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறதோ... ஒருவேளை திரும்பவும் திமுக ஆட்சி வந்துவிட்டால் வடை போய்விடுமோ என்ற பயத்தில், என்ன செய்வது தெரியாமல் கடைசி வரை அதிமுக-விற்கு ஆதரவு என்று வெளிப்படையாக சொல்லாதுதான் மவுன புரட்சியோ என்னமோ...

~
நகைச்சுவை-2

"மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" என்று ரஜினி ஜெ.வுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டதாக ஒரு செய்தி.

நல்ல வேளை, இனி வாரம் ஒருமுறை பாராட்டுக்கூட்டங்களில் பொய்யாக கருணாநிதி அவர்களை பாராட்டிப் பேசவேண்டாம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று நினைத்து இப்படி சொன்னாரோ என்னவோ?

சில/பல வருடங்களுக்கு முன் 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்று சொன்னதும் இதே வாய்தான்... ஒருவேளை சிங்கப்பூர் போய் வாய்மாற்று சிகிச்சை எதுவும் செய்து கொண்டாரா என தெரியவில்லை...

~

இன்னமும் நிறைய நகைச்சுவை செய்திகள் இருந்கின்றது - நேரம் கிடைத்தால் வாரம் ஒரு பதிவாவது எழுதலாம் என்றிருக்கிறேன், பார்க்கலாம்...