Friday, July 10, 2020

படம் பார்த்த கதை

கடைசியாகப் பதிவிட்டு வெகுநாட்கள் (ஆண்டுகள்!) ஆகிவிட்டது. சரக்குத் தீர்ந்துவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை. புத்தக விமர்சனம் எழுதிக்கொண்டிருந்த அண்ணன் திடீரென 'பால்கனி தேவதைகள்' என (சொந்த?) கதை எழுத, அட நாமும் எழுதலாமே என நினைவலைகளைப் புரட்டினால் நம் வாழ்க்கையில் தேவதைகள் எதுவும் குறுக்கிட்டதாக நினைவிற்கு வரவில்லை!

வேறு ஏதாவது பதிவிடலாம் என bloggerல் நுழைந்தால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வரைவு நிலையில் இருக்கும் இந்தப் பதிவு தென்பட்டது. சரி, இதையாவது முடிக்கலாம் என இந்த முயற்சி. அடுத்தப் பதிவு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, யாருக்குத் தெரியும்.

இப்போது கதைக்கு வருவோம்.

...

இளங்கலை மூன்றாம் ஆண்டுப் படிக்கும் போது அவனுக்குத் திடீரென அந்த ஆசை வந்தது. அவன் படித்த கல்லூரி அருகே ஒரு திரையரங்கம் இருந்தது. கல்லூரி மாணவர்கள் சிலர் அந்தத் திரையரங்கத்தில் காலைக்காட்சி படம் பார்க்கச் செல்வது வழக்கம். காலைக்காட்சியில் பெரும்பாலும் ஆங்கிலப்படமே திரையிடப்படும். அதுவும் பொதுவாகவே 'சாமிப்படம்' என அழைக்கப்படும் பிட்டுப்படம்.

என்ன ஆசை என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரிதான், அவனுக்குப் பிட்டுப்படம் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவனுடைய ஆசிரியர்கள் சிலர் அப்பாவின் நண்பர்கள். படம் பார்க்கப் போவது ஒருவேளை அவனுடைய ஆசிரியர்களுக்குத் தெரிய வந்து அப்பாவிடம் கூறிவிட்டால் என்ன ஆகும் என்ற பயமே அவனுடைய ஆசைக்குக் கடிவாளம் போட்டு வைத்தது.

அன்றைய சுப தினம் இரண்டு வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் வரவில்லை என்ற தகவல் வந்தது. நீண்ட நெடும் மனப்போராட்டதிற்குப் பிறகு சில நண்பர்களுடன் படத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தான். ஒருவழியாக, தைரியமாக, திரையரங்கத்துக்குப் போய்விட்டான். படமும் ஆரம்பித்தது. ஆவலுடன் காத்திருந்தான், காத்திருந்தான். மருந்துக்குக்கூட எதுவும்(?) இல்லை. திடீரென படமும் முடிந்து விட்டது. அன்று திரையிடப்பட்டது ஒரு சண்டைப்படமாம். அவனுக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது.

பிரச்சனை அதுவல்ல. படம் முடிந்து, வருத்தத்துடன் கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அவன். சரியாக அந்தச் சமயம் அவனுடைய பேராசிரியர் ஒருவர் மதிய உணவிற்காக வீட்டிற்குச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவனுக்குத் தலையில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று. நண்பர்களின் பின்னால் ஒளிந்து கொள்ள எவ்வளவோ முயற்சித்தான். ஆனாலும் கூட அந்த ஆசிரியரின் கண்ணில் பட்டுவிட்டதாகவே தெரிந்தது.

மதியம் அதே பேராசிரியரின் வகுப்பும் வந்தது. அவர் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசவும் இல்லை, அவனிடம் எதுவும் கேட்கவும் இல்லை. கல்லூரிப் பருவம் முடியும் வரை பயத்துடனே இருந்தான். இருந்தாலும் அவனுக்கு வருத்தம். மாட்டியதுதான் மாட்டினோம், வெறும் சண்டைப்படத்தைப் பார்த்து மாட்டிக்கொண்டு இப்படிக் கெட்டப் பெயரை வாங்கிவிட்டோமே என்று. (பேராசிரியர் பெருந்தன்மையாக விட்டு விட்டாரா, இல்லை அவனைப் பார்க்கவே இல்லையா என்பது இன்றுவரை அவனுக்குப் புலப்படவில்லை)

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு திரையரங்கத்துக்குச் சென்று (பிட்டுப்)படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு எழவேயில்லை. சில பல நாட்களுக்குப் பின்பு 'அலெக்ஸாண்ட்ரா' என்றதொரு படம் மிகவும் பிரபலமாக இரண்டு மூன்று முறை அதே திரையரங்கத்தில் திரையிடப்பட்டது. நண்பர்கள் பலரும் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் போகவே இல்லை. அவ்வளவு பயம்!

...

முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், நண்பன் ஒருவன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீடியோ கேசட் எடுத்து பார்ப்பதென்று முடிவாயிற்று.

நல்லதொரு சனிக்கிழமை நான்கைந்து நண்பர்கள் சாத்தான்குளத்தில் உள்ள நண்பனின் நண்பன் வீட்டிற்குப் படையெடுத்தோம். உடன்குடி நண்பன் ஊரிலிருந்தே ஒரு கேசட் வாங்கி வந்தான். அதைப் பிளேயரில் போட்டு ஆவலுடன் காத்திருந்தால் சமீபத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி ஓடத் தொடங்கியது. எல்லோருக்கும் ஏமாற்றம். தவறான கேசட்!

சரி, உள்ளூரில் ஏதாவது ஏற்பாடு பண்ணலாம் என்று, தெரிந்த (நம்பிக்கையான?) கடைகளில் விசாரித்து ஒருவழியாக ஒரு கேசட் ஏற்பாடு செய்தாயிற்று. இந்தமுறை மிகவும் முன்னெச்சரிக்கையாக சரியான படம்தான் ஓடுகிறதா என்று கடையிலேயே பார்த்து வீட்டிற்கு வரும் போது மணி மதியம் மூன்று ஆகி விட்டது.

அந்த நண்பனின் பெற்றோர் 4:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பி விடுவார்கள் என்பதால் அவசர அவசரமாகப் படத்தை ஆரம்பித்தோம்.

3:05: படம் ஆரம்பித்தது இரண்டு மூன்று நிமிடத்தில் கரெண்ட் போய் விட்டது. சரி, வந்து விடும் என நம்பிக்கையோடு காத்திருந்தோம்.

3:30: இன்னமும் மின்சாரம் வரவில்லை. இன்னமும் நம்பிக்கையோடு இருந்தோம்.

3:45: இலேசான பதட்டம் வர ஆரம்பித்தது.

4:00: நண்பனின் நண்பன் புலம்ப ஆரம்பித்தான். அனைவரும் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். கரெண்ட் இல்லையென்றால் பிளேயரில் இருந்து கேசட்டைக் கூட எடுக்க முடியாதென்பது பிரச்சனையை இன்னமும் தீவிரமாக்கியது.

4:10: ஒருவழியாகக் கரெண்ட் வந்தது. ஒருவன் சொன்னான், இன்னமும் பத்து நிமிடமாவது படம் பார்க்கலாம் என்று. நண்பனின் நண்பன் அவனைப் பார்த்த பார்வையில் அவன் எரிந்து போயிருக்க வேண்டும்.

உடனடியாகக் கேசட்டை வெளியில் எடுத்து, ஓடிப்போய், வாங்கிய கடையில் கொடுத்த பின்புதான் அனைவரும் சகஜ நிலைக்குத் திரும்பினோம்.

இவ்வாறாக இரண்டாம் முயற்சியும் வெற்றிகரமாகத் தோல்வியில் முடிந்தது!

Monday, January 13, 2014

கடைசியில் ரெண்டு கியரை காணோம்!

ஆரா Suzuki Fiero வாங்கிய பின்தான் நானும் ஆராவும் வண்டி ஓட்டவே கற்றுக்கொண்டோம். தாடி என்கிற சாந்தகுமார்தான்  எனக்கும் ஆராவிற்கும் குரு. கிரிநகரின் காலியான மைதானத்தில், நாய்களை தூங்க விடாமல் இரவு தோறும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்து, ஜெயாநகர் RTOவில் லஞ்சம் கொடுக்காமல் வெற்றிகரமாக லைசென்ஸ் எடுத்தோம்.

ஆரா வண்டி வாங்கிய நேரம், TVS & Suzuki இரண்டும் பிரிந்தன. அதன் பிறகு TVS Fiero மட்டுமே வெளிவந்தது. ஆராவிற்கு எப்போதுமே ஒரு கர்வம் உண்டு, தான் Suzuki Fiero ஓட்டுகிறோம் என்று. ஆராவின் இந்த அதிர்ஷ்டம் இப்போதும் தொடர்கிறது. ஆரா Hyundai i10 வாங்கிய உடனேயே Hyundai அந்த மாடலையே நிறுத்தி விட்டு Grand i10 விற்க ஆரம்பித்துவிட்டது.

...


இப்போது கதைக்கு வருவோம். கதை நாயகன் வெண்ணை (எ) வெங்கட்ராமன் அமெரிக்காவெல்லாம் சென்று வந்தவன். அங்கே சொந்தமாக கார் எல்லாம் வைத்திருந்தான். அவனுடைய கஷ்டகாலம் எங்களோடு கொஞ்ச காலம் தங்க வேண்டியதாகிவிட்டது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை அவனுக்கு ரயில் நிலையம் செல்ல வேண்டிய வேலை. வழக்கமாக பேருந்தில் பயணிப்பவன் அதிசயமாக ஆராவின்  TVS Suzuki Fieroவை வாங்கிக்கொண்டு போய் வந்தான்.

...

மிகுந்த களைப்புடன் அறைக்குள் நுழைந்தான்.

"ஏண்டா வெண்ணை, இவ்வளவு லேட்..."

"என்னடா வண்டி வைச்சிருக்கீங்க, ஸ்பீடாவே போக மாட்டேங்குது"

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்.  Suzuki Fiero வேகமாக செல்லவில்லை என்று சொல்லுகிறானே, ஒருவேளை இவன் அமெரிக்காவில் ஹார்லி டேவிட்சன் ஓட்டியிருப்பான், இங்கேயும் அதே போல பைக் எதிர்பார்த்திருப்பானோ என்று.

"இல்லியே வெண்ணை, வண்டியை நேற்றுதானே சர்வீஸ் விட்டு வாங்கினோம்..."

"எங்கடா, 20-30 கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு மேல போகவேயில்லை..."

சாந்தாவிற்கு பொறி தட்டியது. "சரி, நீ எத்தனையாவது கியர்ல போனே?"

"ஏன், நான் 2nd கியர்லதான் போனேன்"

"ஓகோ, வண்டியல எத்தனை கியர் இருக்குதுன்னு தெரியுமா"

"ரெண்டு கியர்தானடா...?"

"நீ ரெண்டாவது கியர் போட்ட பிறகு, கியர் போட ட்ரையே பண்ணலையாடா?"

"எதுக்கு கியர் change பண்ணனும், அதான் already டாப் கியருக்கு போயாச்சே?"

"வெண்ணை, வண்டியில மொத்தம் நாலு கியர், ரெண்டு இல்லை..."

"வண்டிய தர்றதுக்கு முன்னாடி, இதையெல்லாம் சொல்லுறதில்லையாடா?"

"ரெண்டாவது கியர்லேயே மெஜஸ்டிக் வரைக்கும் போயிட்டு வந்திருக்கியே, பெரிய சாதனைதாண்டா, இதுல வண்டி ஸ்லோவா போகுதுன்னு கம்ப்ளைன்ட் வேற..."

...

இன்றும் கூட, போர்த் கியர்ல இருந்தாலும், இன்னொரு தடவை கியர்   பண்ண முயற்சி செய்யும் எனக்கு, வெண்ணை ராமன் எப்படி செகண்ட் கியரிலேயே அவ்வளவு தூரம் போய் வந்தான் என்பது புரியவேயில்லை. 

Wednesday, August 28, 2013

காய்ரா, நான் மற்றும் கல்யாண வீட்டில் ஒரு பெண்!



"அந்த பொண்ணு சூப்பரா இருக்கில்ல..." காய்ரா மகிழ்ச்சியுடன் கத்தினான்.


இடம்: கொச்சி
நிகழ்ச்சி: அனு - நரேஷ் திருமணம்


நான், ஆரா, சாந்தா, காய்ரா & வெண்ணை ராமன் ஐவரும் கொச்சி வந்திருந்தோம். கல்யாண வீடு என்றால் அழகான பெண்கள் இல்லாமலா...

"எந்த பொண்ணுடா?"  - அருண்

"கல்யாண வீட்டுக்கு வந்துட்டு என்ன வேலைடா செய்யிறீங்க..." - வெண்ணை

"ஏண்டா இப்படி அலையுறீங்க..." - சாந்தா

"தாடி, உனக்கு வயசாயிடிச்சு.. சின்ன பசங்க இப்படி அப்படித்தான் இருப்பாங்க..."

"யாரு, நீ சின்ன பையனா, நாலு கழுதை வயசாயிடிச்சு உனக்கு..."

"உனக்கு பொறாமை தாடி..."

...

"வாங்கப்பா, எல்லோரும் மாடிக்கு போகலாம்... அங்க இருந்து பார்த்தா மண்டபம் முழுவதும் தெரியும்."

"போகலாம், போகலாம்... அப்பதான் அந்த பொண்ணு எங்க போனாலும் தெரியும்"

"உங்க கூட வந்தோம் பாரு, தலையெழுத்து..."

...

"வாங்கடா சாப்பிட போகலாம், வயிறு பசிக்குது"

"ஏண்டா வெண்ணை, அதுக்குள்ள என்ன பசி, அந்த பொண்ணே இன்னமும் சாப்பிட போகலை..."

"டேய், வேணாம்..."

"அதத்தானடா நாங்களும் சொல்லுறோம், இப்ப வேணாம், அந்த பொண்ணு போகும் போது நாமளும் சாப்பிட போகலாமுன்னு..."

வெண்ணை ராமனுக்கு மட்டும் நெற்றிக்கண் இருந்திருந்தால் நானும் காய்ராவும் அப்பவே எரிந்து சாம்பலாகி இருப்போம்.

...

"ஏண்டா அதுக்குள்ள எந்திருச்சுட்டீங்க, சாப்பிடலையா?"

"அந்த பொண்ணு எந்திரிச்சு போனப்புறம் இன்னமும் என்ன சாப்பாடு வேண்டியிருக்கு??..."

"தாங்க முடியலைடா சாமி..."

"போங்கடா, போங்க, மறந்துறாம கையை கழுவிட்டு போங்க..."

...

"இந்த ரெண்டு பேரும் எங்கடா போய் தொலைஞ்சானுங்க... stage-க்கு போகலாமுன்னு பார்த்தா ஆளையே காணோம்..."

"அந்த பொண்ணு எங்கயாவது கண்ணுல தென்படுதான்னு பாரு, இவனுங்களை ஈசியா கண்டு பிடிச்சிறலாம்..."

...

கடைசியில் வாழ்த்து கூறுவதற்காக மேடையேறினோம். வாழ்த்து கூறி, புகைப்படம் எடுத்து வந்தவுடன் சாந்தா சொன்னான்.

"வெண்ணைங்களா, அந்த பொண்ணுக்கு ஏற்கனவே கல்யாணம் ஆயிடுச்சாம்..."

திடீரென கல்யாண மண்டபமே அமைதியானது போல தோன்றியது.

'ஏன் தாடி, இதை மொதல்லே விசாரிச்சு சொல்ல வேண்டியதுதானே... வீணா அலைஞ்சுருக்க மாட்டோம்ல..." - சோகத்துடன் சொன்னான் காய்ரா.


பின் குறிப்பு: இது ஒரு உண்மை கலந்த கற்பனைக் கதை.

Tuesday, July 9, 2013

வெண்ணை ராமனின் சமையல் குறிப்பு!

"என்னடா, இன்னைக்கும் உருளைக்கிழங்கு சாம்பார்தானா?" என்று கேட்டபடி, ஒரு பையில் மாம்பழங்களோடு வெண்ணை (எ) வெங்கட்ராமன் வீட்டிற்குள் நுழைந்தபோது மணி இரவு பதினொன்று ஐந்து.

அன்று சனிக்கிழமை. அலுவலகம் விடுமுறை என்றாலும்கூட அழையா விருந்தாளியாக சென்று இரவு வருவது வெண்ணை ராமனின் வழக்கம். இல்லையென்றால் அவனுக்கு தூக்கம் வராது.

ஆரா வழக்கம் போல பத்து மணிக்கெல்லாம் முழுக்க போர்த்தியபடி தூங்கிக்கொண்டிருந்தான். நான், காய்ரா & சாந்தா Catherine Zeta Jones'ன் அழகை ஜொள்ளியபடி மாஸ்க் ஆப் Zorro பார்த்துக்கொண்டிருந்தோம்.

வெண்ணை ராமன், ஐந்து நிமிடத்தில் முகம் கழுவி பூ போட்ட லுங்கிக்கு மாறி சமையல் அறைக்குள் நுழைந்தான். போகிற வாக்கில் தொலைக்காட்சியை நியூஸ் சானலுக்கு மாற்றினான்.

"வெண்ணை, படம் பார்த்துக்கிட்டு இருக்குறது தெரியலை?"

"எத்தனை தடவை இந்த படத்த பார்ப்பீங்கடா..."

"நாங்க எத்தனை தடவை வேணும்னாலும் பார்ப்போம், உனக்கென்னடா..."

தட்டில் சோறோடு வந்து உற்காந்து டிவி பார்க்க ஆரம்பித்தான். கூட்டிற்கு ஒரு மாம்பழம்.

"இந்த உருளைக்கிழங்கு சாம்பாரைத் தவிர வேற எதுவும் செய்ய மாட்டீங்களாடா?" என்று அலுப்புடன் சாப்பிட ஆரம்பித்தான்.

எங்கள் அறையில் புளிக்குழம்பு, தக்காளி சாதம், புளியோதரை, தோசை என்று விதவிதமாக (?) செய்தாலும், அநேக நாள் உருளைக்கிழங்கு சாம்பார் & உருளைக்கிழங்கு கூட்டுதான். வெண்ணை ராமனுக்கு தினமும் வித்தியாசமாக சாப்பிட வேண்டும்.

"ஏண்டா வெண்ணை, லீவ் அன்னைக்கும் ஆபீஸ் போயிட்டு ராத்திரி வந்துட்டு, பேச்சைப்பாரு, ஒழுங்கா மூடிக்கிட்டு சாப்பிடு..."

"வாயை மூடிக்கிட்டு எப்படிடா சாப்பிடமுடியும்?"

"ஜோக் அடிக்கிறாராம்..., டெய்லி விதவிதமா சாப்பாடு வேணும்னா சீக்கிரம் வந்து சமையல் பண்ண வேண்டியதுதானே..."

"ரொம்ப பேசாதீங்கடா... நாளைக்குப் பாரு, நான் வித்தியாசமா ஏதாவது பண்ணுறேன்"

...

ஆக, அடுத்தநாள் வெண்ணை ராமனின் சமையல் என்று முடிவானது. இருந்தாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாத காய்ரா, தான் தக்காளி சாதம் செய்ய போவதாகவும், வெண்ணை ராமன் கூட்டு மட்டும் செய்தால் போதும் என ஒரு முடிவிற்கு வந்தனர்.

மதியம் ஒரு மணி வரைக்கும் வெண்ணை ராமன் சமையல் அறைக்குள் போகவே இல்லை.

'டேய், இன்னைக்கு  நீ கூட்டு பண்ணுறேன்னு சொல்லியிருக்கே, மறந்துறாதே"

"அதெல்லாம் எனக்குத் தெரியும், இன்னும் அரை மணி நேரத்தில ரெடி ஆயிடும்" என்றபடி சமையல் அறைக்குள் நுழைந்தான்

அனைவரும் வெண்ணை ராமனின் சமையலை சுவைக்க ஆவலோடு காத்திருந்தோம். காய்ராவின் ஸ்பெஷல் தக்காளி சாதம் கமகமவென எங்கள் பசியைக் கிள்ளியது. சாப்பிடும் நேரம் வந்தது.

வெண்ணை ராமன் தான் செய்த கேரட் துருவலை கொண்டு வைத்தான். அத்தனை பெரும் அசந்து போய்விட்டோம்.

"எப்படி வெண்ணை இப்படி..."

"கலக்கிட்ட வெங்கட்ராமா..."

"எல்லாம் சரி, இதை செய்ய உனக்கு எதுக்குடா அரை மணி நேரம்?"

இப்படி எங்கள் அனைவரையும் அசர வைத்த வெண்ணை ராமனின் சமையல் குறிப்பு இதோ உங்களுக்காக...

வெங்கட்ராமனின் ஸ்பெஷல் கேரட் துருவல்:
தேவையான பொருட்கள்:
கேரட்: 1/4 கிலோ
எலுமிச்சை பழம்: 1
உப்பு (தேவையான அளவு)

செய்முறை:
முதலில் கேரட்டை கழுவி, தோல் சீவி பூப்போல துருவிக்கொள்ளவும். அத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளவும். துருவி வைத்த கேரட் மேல் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறு விடவும். சுவையான கேரட் துருவல் தயார்.

சமைத்து செய்து பாருங்கள். உண்டு மகிழுங்கள்...

பின் குறிப்பு: இதன் பிறகு நாங்கள் வெங்கட்ராமனை சமையல் செய்ய நிர்பந்தித்ததே இல்லை...

Monday, July 18, 2011

முழு முட்டையை சோற்றில் மறைத்த கதை!


நாங்கள் MCA மூன்றாம் ஆண்டில் கல்லூரி விடுதியை விட்டு வெளியில் வந்து வேறு அறை எடுத்து தங்குவது என்று முடிவு செய்தோம். மூன்றாம் ஆண்டில் project இருக்கும் காரணத்தினால் அரை ஆண்டு மட்டுமே விடுதியில் தங்க வேண்டியது இருந்தாலும் கல்லூரி நிர்வாகம் ஆண்டு முழுவதற்குமான கட்டணத்தை செலுத்த சொன்னதும் ஒரு முக்கிய காரணமாக அமைந்தது.

அம்பாதுறையில் ஒரு அறை வாடகைக்கு எடுத்தோம். அதை அறை என்பதை விட வீடு என்றுதான் சொல்ல வேண்டும். நான், கும்மி, JG, சாந்தா மற்றும் பெயர் சொல்ல விரும்பாத, பின்னர் எதிரியாகிப் போன ஒரு நண்பன்(?). இது போக இன்னமும் இரண்டு பேர், தினமும் வந்து போகும் உறுப்பினர்கள்.

ஆரா திண்டுக்கல்லில் அவனுடைய அக்காவின் வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்தான். தினமும் கல்லூரிக்கு வருகிறானோ இல்லையோ, எங்களுடைய வீட்டிற்கு வரத்தவறுவதில்லை. காய்ரா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் கணேஷ்பாபு மதுரையில் இருந்து நேரடியாக எங்கள் வீட்டிற்கு வந்த பிறகுதான் கல்லூரிக்குச் செல்வான். நிரந்தர உறுப்பினர்களை விட ஆராவும், காய்ராவும் தான் கல்லூரி முடிந்தபின் வீட்டிற்கு முதலில் வந்து, பால் வாங்கி, காபி போடுவார்கள். அதுவும் காய்ரா வந்து காபி குடித்துவிட்டு, மாடியில் இருந்து ரயில் வருகிறதா என்று பார்த்து, தூரத்தில் ரயில் தென்பட்ட பிறகுதான் ரயில் நிலையத்திற்கு ஓடுவான்.

பூந்தோட்டங்களின் ஒருபுறமாக உள்ள ரயில் பாதை வழியாக தினமும் அம்பாதுறையில் இருந்து கல்லூரிக்கு நடந்து சென்று வருவது இனிய அனுபவம். அதிர்ஷ்டம் பக்கம் இருந்தால் வழியில் பாம்பு, தேள் போன்ற ஜந்துகளையும் பார்க்கலாம். அம்பாதுறை ரயில் நிலையமே எங்களின் குடிநீர் தேவையை தீர்த்து வந்தது. சில பல பிரச்சனைகள் இருந்தாலும் வாழ்க்கை இனிதாகவே போய் கொண்டிருந்தது.

அந்த வாடகை வீட்டில் ஒரே குறை, அசைவம் சமைக்க கூடாதென்பதுதான். வீட்டின் உரிமையாளர் ரொம்பவே நல்லவர். வீடு வாடகைக்கு எடுக்கும் போது அவர் போட்ட ஒரே நிபந்தனை, அசைவம் சமைக்க கூடாதென்பதுதான். JG-யை தவிர அனைவரும் அசைவம் சாப்பிடுபவர்கள். எங்களுடைய அசைவ சாப்பாடு வெறியை ஆம்லெட் வடிவில் தீர்ப்பவை சின்னாளப்பட்டி பிரிவில் இருந்த கையேந்திபவன்களும், காந்திகிராம பல்கலைக்கழக நுழைவாயிலில் இருந்த புரோட்டா கடைகளும்தான்.

எங்களுடைய வீட்டிற்கு அருகில் வீடு எடுத்து தங்கியிருந்த இரண்டு பிரம்மச்சாரி ஆசிரியர்கள் வாராவாரம் சிக்கன் பொரிக்கும் வாசனை ஜன்னல் வழி வந்து எங்களை பாடாய்ப்படுத்தும். சமைக்க கூடாதென்பதுதானே நிபந்தனை, சாப்பிடக்கூடாதென்று கூறவில்லையே என லாஜிக் பார்த்து, ஒருமுறை சிக்கன் வாங்கி, அந்த ஆசிரியர்கள் வீட்டில் பொரித்து, எங்கள் வீட்டில் வைத்து சாப்பிட்டோம்.

கடைசியில் ஒருநாள் அந்த நிபந்தனையை உடைப்பதென்று ஒருமனதாக முடிவு செய்தோம். ஆம்லெட் போடலாம் என முட்டை வாங்கியாகிவிட்டது. ஆனால் ஆம்லெட் மணம் காட்டிகொடுத்து விடுமே என்ற பயம் வேறு. அதற்கு சாந்தா ஒரு யோசனை சொன்னான். வாசனை மிகுந்த பத்தி ஒன்றை வாங்கி கொளுத்திவிடுவது அல்லது ஒரு துணியை தீயில் காட்டி அணைத்து கருக விட்டால், ஆம்லெட் மணத்தை அது மறைத்துவிடும் என்று. ஆனாலும் ரிஸ்க் எடுக்க விரும்பாமல் ஆம்லெட் போடும் எண்ணத்தைக் கைவிட்டு, முட்டை அவித்து சாப்பிடுவதென்று பிளான் மாறியது. (இதே யோசனையை பின்பற்றி, பெங்களூரில் சிக்கன் சமைத்தது வேறு கதை!)

ஒருவழியாக சமையல் முடித்து சாப்பிட உட்கார்ந்தோம். JG-யை தவிர அனைவரின் தட்டிலும் ஆளுக்கொரு முட்டை. ஒருவாய் கூட வைத்திருக்க மாட்டோம், தடார் என்று கதவு திறந்தது. வாசலில் வீட்டின் உரிமையாளர். என்ன செய்வதென்று தெரியவில்லை. கும்மி தட்டை எடுத்துக்கொண்டு உள்ளே ஓடினான். அவசரத்தில் இன்னொருவன் முட்டையை சோற்றை வைத்து மறைக்க முயற்சித்தான். 

முதல் அசைவ சமையல் முயற்சியே இப்படி தோல்வியில் முடிந்து விட்டதே என்ற சிந்தனை வேறு. ஆனால் உரிமையாளர் வந்ததோ வேறு விஷயத்தைப் பற்றிப் பேச. நல்ல வேளையாக அவர் எங்களுடைய தட்டை பார்க்காமலேயே பேசி முடித்து சென்ற பிறகுதான் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பினோம். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு நாங்கள் அந்த வீட்டில் அசைவம் சமைக்க முயற்சிக்கவே இல்லை என்பதை சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

பின் குறிப்பு: முட்டையை சோற்றை வைத்து மறைக்க முயற்சித்த அந்த நபர் வேறு யாருமில்லை, அடியேன்தான்...

Friday, June 17, 2011

ஒரு அரசியல் நகைச்சுவை பதிவு


முதல் படமே சூப்பர் ஹிட் கொடுத்துவிட்டு அடுத்த படத்துக்கு சரக்கு இல்லாமல் இருக்கும் டைரக்டர்கள் போல, பெரும் வரவேற்பு பெற்ற (?) முதல் பதிவுக்கு பின் என்ன எழுதுவது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தேன்...

சரி, முதல் பதிவு போல சொந்தக்கதையையே எழுதலாம் என்று பார்த்தால் அது ரொம்ப சோகக்கதையா இருக்கு என்று சிலர் சொல்லி விட்டார்கள்.. நிறைய பேர்(?) 'உங்களிடமிருந்து இன்னமும் நிறைய எதிர்பார்க்கிறோம்'-ன்னு வேற சொல்லிட்டாங்க, என்ன எதிர்பார்க்குறாங்கன்னு ஒண்ணுமே புரியலை, ஹி.. ஹி...

கடைசியில் கடந்த சில நாட்களில் படித்து, ரசித்த, சிரித்த இரண்டு செய்திகளை பதிவாக போடலாம் என்றதன் விளைவே இந்தப்பதிவு...

~
நகைச்சுவை-1

திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பகுதி நேர நடிகர்/இயக்குனர்/அரசியல்வாதி சீமான் "தமிழ்நாட்டில் ஒரு புரட்சியை நடத்திவிட்டு சத்தம் போடாமல் அமர்ந்திருக்கிறார் என் தம்பி விஜய். அவர் நடத்திய மவுன புரட்சிதான் இன்று ஒரு ஆட்சி மாற்றம் ஏற்படவே காரணமாக அமைந்தது," என்று பேசி இருக்கிறார்.

இப்படியெல்லாம் பேச இவர்களுக்கு எப்படித்தான் மனசு வருகிறதோ... ஒருவேளை திரும்பவும் திமுக ஆட்சி வந்துவிட்டால் வடை போய்விடுமோ என்ற பயத்தில், என்ன செய்வது தெரியாமல் கடைசி வரை அதிமுக-விற்கு ஆதரவு என்று வெளிப்படையாக சொல்லாதுதான் மவுன புரட்சியோ என்னமோ...

~
நகைச்சுவை-2

"மீண்டும் முதல்வரானதன் மூலம் தமிழகம் காப்பாற்றப்பட்டது!" என்று ரஜினி ஜெ.வுக்கு தொலைபேசியில் வாழ்த்து கூறினார் என தமிழக அரசு செய்திக் குறிப்பு வெளியிட்டதாக ஒரு செய்தி.

நல்ல வேளை, இனி வாரம் ஒருமுறை பாராட்டுக்கூட்டங்களில் பொய்யாக கருணாநிதி அவர்களை பாராட்டிப் பேசவேண்டாம், தப்பித்தோம், பிழைத்தோம் என்று நினைத்து இப்படி சொன்னாரோ என்னவோ?

சில/பல வருடங்களுக்கு முன் 'ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால் கூட தமிழகத்தைக் காப்பாற்ற முடியாது' என்று சொன்னதும் இதே வாய்தான்... ஒருவேளை சிங்கப்பூர் போய் வாய்மாற்று சிகிச்சை எதுவும் செய்து கொண்டாரா என தெரியவில்லை...

~

இன்னமும் நிறைய நகைச்சுவை செய்திகள் இருந்கின்றது - நேரம் கிடைத்தால் வாரம் ஒரு பதிவாவது எழுதலாம் என்றிருக்கிறேன், பார்க்கலாம்...

Monday, October 25, 2010

பஞ்சம், பசி, பட்டினி!

திடீரென அது எங்களைத் தாக்கியது, ‘அது’ என்றவுடன் ஏதோ ஒரு பயங்கர விலங்கு என நினைத்து விட வேண்டாம். அதை விட கொடியது. பஞ்சமய்யா, பஞ்சம்! செல்வச்செழிப்புடன்(?) இருந்த எங்களுக்கு அப்படியொரு நிலைமை வரும் என நாங்கள் நினைத்துக்கூட பார்க்கவில்லை. இத்தனைக்கும் ஆராவுக்கு 2000 ரூபாயும், JGக்கு 2000 ரூபாயும் இருக்கிறது. ஆனால் இங்கில்லை. வங்கியில்! வங்கியில் எங்கள் பெயரில் இல்லை. வெங்கட் என்ற நண்பரின் பெயரில். அவரோ தற்சமயம் ஊரில் இல்லை. டெல்லியில். இதைத்தான் பணமிருந்தும் பரதேசி என்பார்களோ?

எங்கள் நிலைமைக்கு ஒரு உதாரணம்: கிடந்த சில்லறைகளை சேர்த்துக்கொண்டு கடைக்குச் சென்றான் அமுதன். பணமிருந்தால் பசிக்காத அவனுக்கு அகோரப்பசி. ‘ஐயா, ஒரு tiger biscuit தாருங்கள்’ என்றான். கடைக்காரர், ‘தம்பி, tiger biscuit இல்லை, glucose biscuit தருகிறேன்’ என்றார். “வேண்டாம், வேண்டாம்” என அலறியபடி ஓடிவந்தான் அமுதன். காரணம் அப்படி. glucose biscuit, tiger biscuit-ஐ விட ஒரு ரூபாய் (யப்பா, எவ்வளவு பணம்) அதிகம்!

எங்கள் நிலைமை இப்படியென்றால், இன்னொருவரின் நிலைமை அதை விட மோசம். Dubai-யிலிருந்து திரும்பி வருகிறார் அந்த நபர். Airport-லிருந்து taxi-யில் தம்பி வீட்டிற்கு வருகிறார். தம்பி வீட்டில் இல்லை. எங்கள் வீட்டிற்கு ஓடி வந்தார். ‘பாஸ், இருநூறு ரூபாய் கொடுங்கள், taxi-க்கு கொடுக்க வேண்டும்’ என்றார். மயக்கம் வந்து விட்டது எங்களுக்கு! Dubai return-னின் கதி இப்படியா? அப்படியென்றால் வேலை வெட்டி இல்லாமல் குப்பை கொட்டும் எங்கள் நிலைமை எவ்வளவோ மேல்!

கடைசியில் நிலைமை ரொம்ப மோசமாகிவிடவே, உண்டியலை உடைப்பதென்று முடிவு செய்தோம். உடைத்தோம். சில்லறை, சில்லறை...! ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய், ஐம்பது காசு... நான்கு பேரும் ஆனந்தத்துடன் எண்ணினோம். ஆஹா... 122 ரூபாய் 45 காசு சேர்ந்தது. நான்கு நாட்களுக்கு கவலையில்லை, இரவு ஆனந்தமாக set dosa சாப்பிடலாம், ஆனால் கடைசியில் மனசாட்சி உறுத்தியது. அனைத்தையும் திரும்ப வைத்து விட்டோம். காரணம் உண்டியல் எங்களுடையதல்ல., பசியிலும் என்ன ஒரு பண்பு. (வேறு வழியில்லாமல் 20 ரூபாய் எடுத்தது வேறு விசயம்!)

அண்ணாமலை என்றொரு நண்பன் DD அனுப்புவதாகச் சொல்லி வாரம் ஒன்றுக்கும் மேல் ஆகி விட்டது. ஒவ்வொரு நாளும் courier-ஐ ஆவலுடம் எதிர்பார்த்தோம். ஒவ்வொரு ஓசைக்கும் ஓடி வந்து வாசலைப் பார்த்தோம். வந்தது courier! அந்த மனிதன் வந்து தருவதற்குள் பிடுங்காத குறையாய் அதை வாங்கி அவசரத்துடன் கிழித்தோம். DD... Huraay...! அதுவும் நான்காயிரம் ரூபாய்க்கு! ஆனால் சந்தோசம் நிமிட நேரத்தில் தொலைந்து போனது, DD இருந்தது மீண்டும் வெங்கட் பெயரில்! கானல் நீரானது எங்கள் சந்தோசம்.

ஆசை விடவில்லை. ஏதோ ஒரு குருட்டு நம்பிக்கையில் அனைவரின் உடைமைகளையும் மீண்டும் சோதனை போடுவதென்று முடிவெடுத்தோம். ஏதாவது கிடைக்காதா என்ற நப்பாசையில்தான். திடீரென அமுதன் கத்தினான் ‘கண்டுகொண்டேன், கண்டுகொண்டேன்’ என்று. மகிழ்ச்சியில் எல்லோரும் அவனை சூழ்ந்து கொண்டோம். எடுத்துக்காட்டினான், 10 பைசாவை, அவன் பெட்டியில் இருந்து. அதையும் சேர்த்து ஒண்ணரை ரூபாய் சேர்ந்தது.

“அப்பாடி! நாளை Times of India-விற்கு கவலை இல்லை”, என்று நிம்மதியுடன் பெருமூச்சு விட்டான் JG.

Extract from Pages 21-29 Aug 2000 of 'Our Golden Days @ Bangalore' by Ara, Arun, Shantha & JG