Monday, January 13, 2014

கடைசியில் ரெண்டு கியரை காணோம்!

ஆரா Suzuki Fiero வாங்கிய பின்தான் நானும் ஆராவும் வண்டி ஓட்டவே கற்றுக்கொண்டோம். தாடி என்கிற சாந்தகுமார்தான்  எனக்கும் ஆராவிற்கும் குரு. கிரிநகரின் காலியான மைதானத்தில், நாய்களை தூங்க விடாமல் இரவு தோறும் விடாமுயற்சியுடன் பயிற்சி எடுத்து, ஜெயாநகர் RTOவில் லஞ்சம் கொடுக்காமல் வெற்றிகரமாக லைசென்ஸ் எடுத்தோம்.

ஆரா வண்டி வாங்கிய நேரம், TVS & Suzuki இரண்டும் பிரிந்தன. அதன் பிறகு TVS Fiero மட்டுமே வெளிவந்தது. ஆராவிற்கு எப்போதுமே ஒரு கர்வம் உண்டு, தான் Suzuki Fiero ஓட்டுகிறோம் என்று. ஆராவின் இந்த அதிர்ஷ்டம் இப்போதும் தொடர்கிறது. ஆரா Hyundai i10 வாங்கிய உடனேயே Hyundai அந்த மாடலையே நிறுத்தி விட்டு Grand i10 விற்க ஆரம்பித்துவிட்டது.

...


இப்போது கதைக்கு வருவோம். கதை நாயகன் வெண்ணை (எ) வெங்கட்ராமன் அமெரிக்காவெல்லாம் சென்று வந்தவன். அங்கே சொந்தமாக கார் எல்லாம் வைத்திருந்தான். அவனுடைய கஷ்டகாலம் எங்களோடு கொஞ்ச காலம் தங்க வேண்டியதாகிவிட்டது.

ஒரு ஞாயிற்றுக் கிழமை அவனுக்கு ரயில் நிலையம் செல்ல வேண்டிய வேலை. வழக்கமாக பேருந்தில் பயணிப்பவன் அதிசயமாக ஆராவின்  TVS Suzuki Fieroவை வாங்கிக்கொண்டு போய் வந்தான்.

...

மிகுந்த களைப்புடன் அறைக்குள் நுழைந்தான்.

"ஏண்டா வெண்ணை, இவ்வளவு லேட்..."

"என்னடா வண்டி வைச்சிருக்கீங்க, ஸ்பீடாவே போக மாட்டேங்குது"

நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம்.

எங்களுக்கெல்லாம் ஆச்சரியம்.  Suzuki Fiero வேகமாக செல்லவில்லை என்று சொல்லுகிறானே, ஒருவேளை இவன் அமெரிக்காவில் ஹார்லி டேவிட்சன் ஓட்டியிருப்பான், இங்கேயும் அதே போல பைக் எதிர்பார்த்திருப்பானோ என்று.

"இல்லியே வெண்ணை, வண்டியை நேற்றுதானே சர்வீஸ் விட்டு வாங்கினோம்..."

"எங்கடா, 20-30 கிலோ மீட்டர் ஸ்பீடுக்கு மேல போகவேயில்லை..."

சாந்தாவிற்கு பொறி தட்டியது. "சரி, நீ எத்தனையாவது கியர்ல போனே?"

"ஏன், நான் 2nd கியர்லதான் போனேன்"

"ஓகோ, வண்டியல எத்தனை கியர் இருக்குதுன்னு தெரியுமா"

"ரெண்டு கியர்தானடா...?"

"நீ ரெண்டாவது கியர் போட்ட பிறகு, கியர் போட ட்ரையே பண்ணலையாடா?"

"எதுக்கு கியர் change பண்ணனும், அதான் already டாப் கியருக்கு போயாச்சே?"

"வெண்ணை, வண்டியில மொத்தம் நாலு கியர், ரெண்டு இல்லை..."

"வண்டிய தர்றதுக்கு முன்னாடி, இதையெல்லாம் சொல்லுறதில்லையாடா?"

"ரெண்டாவது கியர்லேயே மெஜஸ்டிக் வரைக்கும் போயிட்டு வந்திருக்கியே, பெரிய சாதனைதாண்டா, இதுல வண்டி ஸ்லோவா போகுதுன்னு கம்ப்ளைன்ட் வேற..."

...

இன்றும் கூட, போர்த் கியர்ல இருந்தாலும், இன்னொரு தடவை கியர்   பண்ண முயற்சி செய்யும் எனக்கு, வெண்ணை ராமன் எப்படி செகண்ட் கியரிலேயே அவ்வளவு தூரம் போய் வந்தான் என்பது புரியவேயில்லை. 

No comments:

Post a Comment