கடைசியாகப் பதிவிட்டு வெகுநாட்கள் (ஆண்டுகள்!) ஆகிவிட்டது. சரக்குத் தீர்ந்துவிட்டது என்பதே நிதர்சனமான உண்மை. புத்தக விமர்சனம் எழுதிக்கொண்டிருந்த அண்ணன் திடீரென 'பால்கனி தேவதைகள்' என (சொந்த?) கதை எழுத, அட நாமும் எழுதலாமே என நினைவலைகளைப் புரட்டினால் நம் வாழ்க்கையில் தேவதைகள் எதுவும் குறுக்கிட்டதாக நினைவிற்கு வரவில்லை!
வேறு ஏதாவது பதிவிடலாம் என bloggerல் நுழைந்தால் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகளாக வரைவு நிலையில் இருக்கும் இந்தப் பதிவு தென்பட்டது. சரி, இதையாவது முடிக்கலாம் என இந்த முயற்சி. அடுத்தப் பதிவு வர இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆகுமோ, யாருக்குத் தெரியும்.
இப்போது கதைக்கு வருவோம்.
...
இளங்கலை மூன்றாம் ஆண்டுப் படிக்கும் போது அவனுக்குத் திடீரென அந்த ஆசை வந்தது. அவன் படித்த கல்லூரி அருகே ஒரு திரையரங்கம் இருந்தது. கல்லூரி மாணவர்கள் சிலர் அந்தத் திரையரங்கத்தில் காலைக்காட்சி படம் பார்க்கச் செல்வது வழக்கம். காலைக்காட்சியில் பெரும்பாலும் ஆங்கிலப்படமே திரையிடப்படும். அதுவும் பொதுவாகவே 'சாமிப்படம்' என அழைக்கப்படும் பிட்டுப்படம்.
என்ன ஆசை என்பது இந்நேரம் உங்களுக்குப் புரிந்திருக்கும். சரிதான், அவனுக்குப் பிட்டுப்படம் பார்க்க வேண்டும் என்று ஆசை. அவனுடைய ஆசிரியர்கள் சிலர் அப்பாவின் நண்பர்கள். படம் பார்க்கப் போவது ஒருவேளை அவனுடைய ஆசிரியர்களுக்குத் தெரிய வந்து அப்பாவிடம் கூறிவிட்டால் என்ன ஆகும் என்ற பயமே அவனுடைய ஆசைக்குக் கடிவாளம் போட்டு வைத்தது.
அன்றைய சுப தினம் இரண்டு வகுப்புகளுக்கான ஆசிரியர்கள் வரவில்லை என்ற தகவல் வந்தது. நீண்ட நெடும் மனப்போராட்டதிற்குப் பிறகு சில நண்பர்களுடன் படத்துக்குப் போகலாம் என்று முடிவு செய்தான். ஒருவழியாக, தைரியமாக, திரையரங்கத்துக்குப் போய்விட்டான். படமும் ஆரம்பித்தது. ஆவலுடன் காத்திருந்தான், காத்திருந்தான். மருந்துக்குக்கூட எதுவும்(?) இல்லை. திடீரென படமும் முடிந்து விட்டது. அன்று திரையிடப்பட்டது ஒரு சண்டைப்படமாம். அவனுக்கு மிகுந்த ஏமாற்றமாகிவிட்டது.
பிரச்சனை அதுவல்ல. படம் முடிந்து, வருத்தத்துடன் கல்லூரிக்குத் திரும்பிக் கொண்டிருந்தான் அவன். சரியாக அந்தச் சமயம் அவனுடைய பேராசிரியர் ஒருவர் மதிய உணவிற்காக வீட்டிற்குச் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அவனுக்குத் தலையில் இடி விழுந்தது மாதிரி ஆயிற்று. நண்பர்களின் பின்னால் ஒளிந்து கொள்ள எவ்வளவோ முயற்சித்தான். ஆனாலும் கூட அந்த ஆசிரியரின் கண்ணில் பட்டுவிட்டதாகவே தெரிந்தது.
மதியம் அதே பேராசிரியரின் வகுப்பும் வந்தது. அவர் அந்தச் சம்பவத்தைப் பற்றிப் பேசவும் இல்லை, அவனிடம் எதுவும் கேட்கவும் இல்லை. கல்லூரிப் பருவம் முடியும் வரை பயத்துடனே இருந்தான். இருந்தாலும் அவனுக்கு வருத்தம். மாட்டியதுதான் மாட்டினோம், வெறும் சண்டைப்படத்தைப் பார்த்து மாட்டிக்கொண்டு இப்படிக் கெட்டப் பெயரை வாங்கிவிட்டோமே என்று. (பேராசிரியர் பெருந்தன்மையாக விட்டு விட்டாரா, இல்லை அவனைப் பார்க்கவே இல்லையா என்பது இன்றுவரை அவனுக்குப் புலப்படவில்லை)
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு திரையரங்கத்துக்குச் சென்று (பிட்டுப்)படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணமே அவனுக்கு எழவேயில்லை. சில பல நாட்களுக்குப் பின்பு 'அலெக்ஸாண்ட்ரா' என்றதொரு படம் மிகவும் பிரபலமாக இரண்டு மூன்று முறை அதே திரையரங்கத்தில் திரையிடப்பட்டது. நண்பர்கள் பலரும் எவ்வளவோ வற்புறுத்தி அழைத்தும் போகவே இல்லை. அவ்வளவு பயம்!
...
முதல் முயற்சி தோல்வியில் முடிந்ததால், நண்பன் ஒருவன் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீடியோ கேசட் எடுத்து பார்ப்பதென்று முடிவாயிற்று.
நல்லதொரு சனிக்கிழமை நான்கைந்து நண்பர்கள் சாத்தான்குளத்தில் உள்ள நண்பனின் நண்பன் வீட்டிற்குப் படையெடுத்தோம். உடன்குடி நண்பன் ஊரிலிருந்தே ஒரு கேசட் வாங்கி வந்தான். அதைப் பிளேயரில் போட்டு ஆவலுடன் காத்திருந்தால் சமீபத்தில் நடந்த ஒரு கிரிக்கெட் போட்டி ஓடத் தொடங்கியது. எல்லோருக்கும் ஏமாற்றம். தவறான கேசட்!
சரி, உள்ளூரில் ஏதாவது ஏற்பாடு பண்ணலாம் என்று, தெரிந்த (நம்பிக்கையான?) கடைகளில் விசாரித்து ஒருவழியாக ஒரு கேசட் ஏற்பாடு செய்தாயிற்று. இந்தமுறை மிகவும் முன்னெச்சரிக்கையாக சரியான படம்தான் ஓடுகிறதா என்று கடையிலேயே பார்த்து வீட்டிற்கு வரும் போது மணி மதியம் மூன்று ஆகி விட்டது.
அந்த நண்பனின் பெற்றோர் 4:30 மணிக்கு வீட்டிற்கு திரும்பி விடுவார்கள் என்பதால் அவசர அவசரமாகப் படத்தை ஆரம்பித்தோம்.
3:05: படம் ஆரம்பித்தது இரண்டு மூன்று நிமிடத்தில் கரெண்ட் போய் விட்டது. சரி, வந்து விடும் என நம்பிக்கையோடு காத்திருந்தோம்.
3:30: இன்னமும் மின்சாரம் வரவில்லை. இன்னமும் நம்பிக்கையோடு இருந்தோம்.
3:45: இலேசான பதட்டம் வர ஆரம்பித்தது.
4:00: நண்பனின் நண்பன் புலம்ப ஆரம்பித்தான். அனைவரும் இப்போது என்ன செய்வது என்று தெரியாமல் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். கரெண்ட் இல்லையென்றால் பிளேயரில் இருந்து கேசட்டைக் கூட எடுக்க முடியாதென்பது பிரச்சனையை இன்னமும் தீவிரமாக்கியது.
4:10: ஒருவழியாகக் கரெண்ட் வந்தது. ஒருவன் சொன்னான், இன்னமும் பத்து நிமிடமாவது படம் பார்க்கலாம் என்று. நண்பனின் நண்பன் அவனைப் பார்த்த பார்வையில் அவன் எரிந்து போயிருக்க வேண்டும்.
உடனடியாகக் கேசட்டை வெளியில் எடுத்து, ஓடிப்போய், வாங்கிய கடையில் கொடுத்த பின்புதான் அனைவரும் சகஜ நிலைக்குத் திரும்பினோம்.
இவ்வாறாக இரண்டாம் முயற்சியும் வெற்றிகரமாகத் தோல்வியில் முடிந்தது!
உண்மையை முழுமையாக எழுத கொஞ்சம் தயங்குவது போல இருக்கு.. அதனால் சுவாரஸ்யத்திற்கு பஞ்சமாகி விட்டது . 😊
ReplyDeleteபாவம் தான் அந்த இளைஞன். அந்த இளைஞனை போல் அலெக்ஸாண்டரா பார்க்க ஆசை பட்டு பலநாள் வாய்ப்புக்காக காத்திருந்த நாட்கள் உண்டு. ஆனால் அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை. இரண்டாவது முயற்சியில் அந்த சாத்தான்குளம் நண்பன் நிலையும் பரிதாபம் தான். அந்த கேசட்டை எடுபதற்க்கு கரெண்ட் வருவதர்க்குள அவன் ரொம்பவே பயந்து இருப்பான்.
ReplyDelete